The Direct Link

Search Any Links, Share Direct Links

General

அநீதிக்கு எதிராக ஒன்றிணைவோம்...!

By போராளி, Published on 1 year ago, 500 Views
Tags : #savuku_sankar #porali_sankar #சவுக்குசங்கர் #WeSupportSavukkuShankar #WeStandWithSavukkuShankar

திரு. சவுக்குசங்கர்அவர்கள், கீச்சகம் (Twitter), படவரி (Instagram), முகநூல் (Facebook)போன்ற சமூகவலைதளங்களில் இவரை பற்றி தெரியாதவர்எவரும் இருக்கமுடியாது. சமூகவலைதளங்களில் ஒருபிரபலத்திற்கு, மிகமுக்கியமான நபர் என அழைக்கப்படுகிறவர்களுக்கு என்ன வரவேற்பு இருக்குமோஅந்த அளவிற்கு பெரும் பேராதரவைமக்களிடையே பெற்றவர். இதற்கு காரணம், தமிழக அரசில் இருக்கும் எந்த துறையில் தவறுகள் நடந்தாலும், தவறு செய்த அரசு அதிகாரிகள் எந்த உயர்பதவியில் இருந்தாலும், அவர்கள் கோபம் கொண்டு செய்யும் பழிச்செயல்களுக்கு அஞ்சாமல் இன்றுவரை தனிஒருவனாய் அனைவரையும் எதிர்த்து அவர்கள் செய்யும் தவறை கேள்வி கேட்கும் துணிவும், அரசுத்துறைமட்டுமில்லாது, தனியார்துறைகள், ஊடகங்கள்என அனைத்துதுறைகளில் நடக்கும் அநீதியை எதிர்த்து போராடும் குணமுமேஆகும்.

திரு. சவுக்குசங்கர்அவர்கள்தனது 16-வதுவயதில்எழுத்தர் (clerk)என்னும் கடைநிலை ஊழியராகவே லஞ்சஒழிப்புத்துறையில் பணியில்சேர்ந்தார்.

 

“எந்த ஒரு மனிதன் சுயநலமின்றி 

மக்களுக்காக போராடுகிறானோ 

அவனே உண்மையான

தலைவன்”


திரு. சவுக்குசங்கர்அவர்கள்

திரு. சவுக்கு சங்கர் அவர்கள் தனது 16-வது வயதில் எழுத்தர் (clerk) என்னும் கடைநிலை ஊழியராகவே லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியில் சேர்ந்தார். அவருக்கு அளித்த பணியை அவர் சிறப்பாக செய்ததால் பல பதவி உயர்வுகளைப் பெற்று, லஞ்ச ஒழிப்புத்துறையின் இரகசியப்பிரிவில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பின்னாளில், 18 வருடம் அனுபவம் கொண்ட அரசு அதிகாரியாக லஞ்ச ஒழிப்புத்துறையின் இரகசியப்பிரிவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் மீது சொத்துக்குவிப்பு வழக்கு போடுவதற்காக பேசப்பட்ட தொலைபேசி அழைப்பு ஒட்டுக்கேட்கப்பட்டது என்பதற்காக அவர்மீது 2008-ஆம் வருடம் தகவல் தொழிலில்நுட்ப சட்டத்தின் 66,70 மற்றும் 72 ஆகிய பிரிவுகளின் கீழ் சிபி-சிஐடி வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதன்பின், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பு 45 சாட்சிகளை விசாரித்து 120-க்கும் மேற்பட்ட ஆவணங்களை மேற்கோள் காட்டியது. அவர்மேல் பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கு நிரூபிக்கப்படாததால் 2017-ஆம் ஆண்டு இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

https://www.savukkuonline.com/

தன்மீது 2008-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டபின், அரசு வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக 2008-09-க்கு இடைப்பட்ட காலத்தில் சவுக்கு என்னும் இணையதளத்தை தொடங்கி, அதில் தமிழக அரசு துறைகளில் நடைபெறும் முறைகேடுகளையும், தனியார் மற்றும் ஊடகங்கள் என அனைத்து துறைகளிலும் நடக்கும் அநீதிகளையும் கேள்வி கேட்கும் விதமாக அவரால் பல கட்டுரைகள் எழுதப்பட்டன.

“சமூகத்தில் நடக்கும் அநீதிகளைக் கண்டு 

உன்னாலும் கொதித்தெழ முடிந்தால் 

நீயும் என் தோழனே”

அவர் ஒருவர் மட்டுமே, அண்ணா பல்கலைக்கழகத்தில்(2008) மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் நடைபெற்ற முறைகேடு, 2ஜி அலைக்கற்றை முறைகேடு (2G Spectrum Scam), ஈஷா யோகா மையம் வளாக கட்டிட முறைகேடு (வனப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டது) முதல் மாபெரும் குட்கா ஊழல் (The Great Gutkha Scam), மாபெரும் இந்திய பாஸ்போர்ட் ஊழல் (Davidson’s The great Indian Passport Scam), மதுரை மத்திய சிறைச்சாலையில் நடந்த பலகோடி ஊழல் (The Ocean’s Thirteen of TN Prisons – Multicrore Scam in Madurai) வரை, அரசு அதிகாரிகள் அரசு வாகனங்களை தனது சொந்த வேலைக்காக பயன்படுத்துவது, orderly முறை போன்ற பல ஊழல்களையும், அரசு அதிகாரிகள் செய்யும் அதிகார துஷ்பிரயோக செயல்களையும் வெளிஉலகிற்கு காட்டியவர். அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் செய்யும் தவறுகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தங்களது பணியை அவர்கள் நேர்மையோடும், அரசு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டும், தங்களது பதவி பிரமாணத்தின் போது ஏற்றுக்கொண்ட சத்தியத்தின் படியும் பணி செய்யவேண்டும் என்பதற்காக நடத்தப்படும் ஒரு சாமானியனின் போராட்டமே இது.

இவருடைய போராட்டம் தனிநபர் மட்டும் சார்ந்தது அல்ல. ஒட்டுமொத்த சமூகத்திற்குமானது.

“அநீதிக்கெதிராக உயராத கையும் 

அநீதிக்கெதிராக திறக்காத வாயும் 

அடிமையாக இருக்கமட்டுமே அருகதையானது”

அவர் தன்னுடைய சவுக்கு இணையதளத்தில் தனது கட்டுரைகளில் பல ஊழல்களையும், முறைகேடுகளையும் ஆதாரப்பூர்வமாக வெளிக்கொண்டு வந்துள்ளார். இதனால் சமுதாயத்தில் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலரும் தங்களுடைய பணியை நேர்மையாக செய்ய வேண்டும் என்னும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் சமூகத்தில் ஊழல்கள் குறைந்துள்ளன என்பதே நிதர்சனமான உண்மை.

அவர் எழுதும் சில கட்டுரைகளிலும் சரி, சமூக வலைதளங்களில் எழுதப்படும் பதிவுகளிலும் சரி, தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடியவர், சில நேரங்களில் தவறு செய்தவர்களைப் பற்றி பேசும்போது மரியாதை இல்லாமல் பேசக்கூடியவர் போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர்மேல் இருக்கின்றன. 

சமுதாயத்தில் நடக்கும் அநீதியைக் கண்டு பொறுக்க முடியாமல் கோபம் கொள்ளும் ஒவ்வொரு மனிதனின் செயலும் இப்படியாகவே இருக்கும்.

 

சமீப காலங்களில் அவர் அளித்த வலையொளி நேர்காணல் ஒன்றில் ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என்று நீதித்துறையின் மேல் குற்றம்சாட்டியதனால், அவர்மேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு (Contempt of Court) பதிவுசெய்யப்பட்டது.

இந்த வழக்கினை நீதிபதி திரு. ஜி. ஆர். சுவாமிநாதன் என்பவர் பதிவு செய்து, அவரது தலைமையிலேயே இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளையில் விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரிக்கப்படும்போது அவருக்காக வாதாடுவதற்கு என்று (பயத்தின் காரணமாக) எந்த வழக்கறிஞரும் தானாக முன்வந்து ஆஜராகவில்லை. அரசு தரப்பிலிருந்தும் எந்தவொரு வழக்கறிஞரையும் நியமிக்கவில்லை. நீதிமன்றம் சார்பாக அவர்மேல் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கைக்கு அவர் தனது பக்க விளக்கங்களையும், கருத்துக்களையும் எடுத்துரைப்பதற்கு அவர் கேட்ட 8 வார காலஅவகாசத்திற்கு பதிலாக ஒரு வார காலஅவகாசமே  வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல்  Amicus Curiae Brief திரு. சவுக்கு சங்கர் அவர்களுக்கு எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி தாக்கல் செய்யப்பட்டது.

[Amicus Curiae Brief: இது ஒரு லத்தீன் சொல்லாகும். அமிகஸ் கியூரி சுருக்கம் என்பது ஒரு வழக்கில் தரப்பினர் அல்லாத ஆனால் அதன் முடிவில் ஆர்வமுள்ள ஒருவரால் தாக்கல் செய்யப்படுகிறது. அமிகஸ் கியூரி சுருக்கத்தை தாக்கல் செய்ய விரும்பும் நபர் வழக்கமாக நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.]

இப்போது, அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.

நீதியரசர்கள் என்று அழைக்கப்படும்  நீதிபதிகளே இதுபோன்ற ஒருதலைபட்சமான தீர்ப்பினை வழங்கும்போது பொதுமக்களுக்கு நீதிமன்றங்களின் மேல் இருக்கும் நன்மதிப்பு வீழ்கிறது. ஏனெனில், 

"ஒரு சாமானியனின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம்"

நமது ஜனநாயக நாடு என்றழைக்கப்படும், மக்களாட்சி நடக்கும் இந்திய நாடு 75 சுதந்திர ஆண்டுகளை கண்ட பின்னும், நீதிபதிகள் தவறுகள் செய்யும்போது அவர்கள் விசாரிக்கப்படுவது  அல்லது அவர்களுக்கெதிராக வழக்கு பதிவு செய்வது  அல்லது தண்டனை வழங்குவது என்று எந்த நடவடிக்கையும் இதுவரை நடைபெற்றதாய் வரலாறில்லை.  எனில், இவர்கள் தவறே செய்யாதவர்களா? அல்லது இவர்கள் செய்யும் தவறை, இவர்கள் நீதியரசர்கள் என்று அழைக்கப்படுவதால் யாரும் கேள்வி கேட்க முற்படவில்லையா?  இது போன்ற செயல்களினால் நீதிபதிகளில் யார் நேர்மையானவர்? யார் ஊழல்வாதி? யார் அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடியவர்? என்பதை எவ்வாறு மக்கள் அறிய இயலும். எந்தவொரு  மேலும் இதுவரை குற்றச்சாட்டுகள் இல்லாததால் அனைத்து நீதிபதிகளுமே நேர்மை தவறாதவர்கள் என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

இதனால்தான் ஒட்டுமொத்த நீதித்துறையையும் திரு. சவுக்கு சங்கர் அவர்கள் ஊழல் நிறைந்தது என்றார். இதையே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் தன்னுடைய வாதமாகவும், விளக்கமாகவும் எடுத்துரைக்க முயன்றார்.

அப்படி அனைத்து நீதிபதிகளுமே நேர்மையானவர்கள் என்றால் திரு. சவுக்கு சங்கர் அவர்களின் வழக்கில் ஒருதலைப்பட்சமான தீர்ப்பை வழங்கியதேன்? இதற்குப்பின் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்குகளுக்கும் முழுமையாக விசாரிக்கப்படாமல் இதுபோன்ற தவறான தீர்ப்பு வழங்கப்படுமா? இதுவரை நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட அனைத்து வழக்குகளுக்கும் சரியான தீர்ப்புதான் வழங்கப்பட்டதா? இது போன்ற பல கேள்விகள் மனதில் எழுகின்றன.

இது இந்தியா எனும் ஜனநாயக நாட்டில் வாழும் மக்களின் கருத்துரிமையை கேள்விக்குறியாக்குகிறது. இன்று இவர் நீதிமன்றத்தை எதிர்த்து பேசினார் என்பதற்காக உயர்நீதிமன்றம், மதுரை கிளை அவருக்கு சிறைத்தண்டனை வழங்கியிருக்கிறது.

நாளை இதுபோல், தமிழகத்தில் வாழும், இந்தியாவில் வாழும் ஒரு சாதாரண மனிதன் அரசுத்துறைகளில் நடக்கும் அநீதிகளை கேள்வி கேட்டால் அவருக்கும் நீதியரசர்களினால் சிறைத்தண்டனை வழங்கப்படுமா? அவர்களது கருத்துரிமையும் பறிக்கப்படுமா?

"மண்டியிட்டு வாழ்வதைவிட 

நிமிர்ந்துநின்று சாவதே மேல்"

இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் விதமாக, திரு. சவுக்கு சங்கர் அவர்களை விடுதலை செய்வதோடு மட்டுமல்லாமல், நீதிபதிகள் (உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம்) தவறு செய்யும்போது, அவர்களை கேள்வி கேட்கும் விதமாக, அவர்களுக்கென்று ஓர் ஆணையத்தை, சிறந்த நேர்மையான தலைமையைக்கொண்டு நியமித்து, அவர்களின் பணியைக் கண்காணிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

நீதிதேவதை: 

வாதாடும் வழக்கறிஞர்களின் முகத்தை பார்க்காமல், அவர்கள் வைக்கும் வாதத்தைக் கேட்டு நீதி வழங்கவே நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டுள்ளன. இப்படி வழங்கப்பட்டால் தான் அதற்கு பெயர் நீதி. இப்படித்தான் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டுள்ளன.

தராசின் ஒரு தட்டில் எடைக்கல்லும், மறுதட்டில் பொருளையும் வைக்கும்போது தராசின் முள் எவ்வாறு சரியான நிலையை காட்டுகின்றதோ, அதுபோல பாதிக்கப்பட்டவர்கள் நீதியை வேண்டும்போது, இரு தரப்பினரது வாதங்களையும் எந்தவொரு பாரபட்சமுமின்றி ஆராய்ந்து தராசின் முள்ளைப்போல சரியான நீதியை வழங்க வேண்டும் என்பதற்காகவே நீதிதேவதையின் கைகளில் தராசு கொடுக்கப்பட்டிருக்கிறது.

“Soul of the Justice is Fair and Equal Administration of the law

Without

Corruption, Favor, Greed or Prejudice”

சட்டம் என்னும் இருட்டறையில் வாதம் என்னும் விளக்கின் வழியாக நீதி என்னும் ஒளியை கண்டுபிடித்து தருமாறு உச்சநீதிமன்றத்தை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 

 

"புரட்சி தானாக உருவாவதில்லை 

நாம்தான் அதை 

உருவாக்க வேண்டும்"

 

#WeSupportSavukkuShankar

#WeStandWithSavukkuShankar

எழுத்து,

போராளி 

Note: 

          எப்பொழுதெல்லாம் செயற்கை இயற்கையை மிஞ்ச முயற்சிக்கின்றதோ அப்பொழுதெல்லாம் இயற்கை தன்னை தகவமைத்து, தானாகவே சமநிலை செய்து கொள்ளும். அதுபோலவே இனியும்....

"விதைத்தவன் உறங்கினாலும் 

விதை உறங்குவதில்லை"


Go to Download Link →

Report Inappropriate content / Link not working ?